இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டில் அமெரிக்கா உறுதியான நிலைப்பாடு

nisha desai biswalஇலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்துள்ளபோதும் மேலும் பல நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான ஆய்வுப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமை என்ற தொனிப்பொருளிலான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக தனியான அலுவலகமொன்றை அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் வரவேற்றுள்ளது. அத்துடன், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பது முன்னேற்றகரமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

நெருக்கடியான காலங்களில் எம்முடன் இருந்தமை குறித்து நாம் நன்றியுடன் இருக்கின்றோம். நல்லிணக்க முயற்சிகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. ஆரம்பித்திருக்கும் இவை உண்மையானதாக இருக்கவேண்டும் என்றும் நிஷா பிஸ்வால் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான படிகளை முன்னெடுத்து வைத்துள்ளது.

மக்களின் காணிகளை உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்குவது, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்க செயற்பாடுகள் தற்பொழுதே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடினமான வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இருந்தாலும் இந்தப் பயணத்தில் இலங்கை மாத்திரம் அல்ல, ஆதரவு வழங்க அமெரிக்காவும் தயாராக இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் மேலும் தெரிவித்தார்.