வருடாந்தம் 150 மில். யூரோவை இலங்கை வருமானமாக பெறும்

colshiranபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியாலும் சர்வதேச சமூகத்துடன் அவருக்குள்ள நெருக்கத்தினாலும் ஐரோப்பிய யூனியன் விதித்திருந்த இலங்கை மீன் ஏற்றுமதி மீதான தடை விலக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இலங்கை மீன் ஏற்றுமதி மீதான ஐரோப்பிய சமூகத்தின் தடை நீக்கப்பட்ட செய்தி வெளியானதையடுத்து இலங்கை ரின் மீன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இத்தடை காரணமாக வருடமொன்றுக்கு 150 மில்லியன் யூரோ நஷ்டத்தை இலங்கை எதிர்கொண்டிருந்தது என்றும் தடை நீக்கப்பட்டதால் தமது சங்க அங்கத்தவர்கள் தமது ஏற்றுமதி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார்கள் என்றும் இவர் தினகரனுக்குத் தெரிவித்ததோடு அமைச்சர்களான மஹிந்த அமரவீர மற்றும் சரத் அமுனுகம ஆகியோர்க்கும் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

எமது ‘கெலவல்லா’ மீன்களை அதிக அளவில் கொள்வனவு செய்யும் நாடுகளாக பிரிட்டன், சுவிஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் விளக்குகின்றன. மீன் ஏற்றுமதித் தடையாலும், சீனாவில் இருந்து பெருமளவில் டின் மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதாலும் உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கு மீன்களை வழங்கும் உள்ளூர் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மீன் ஏற்றுமதி மற்றும் ரின் மீன் உற்பத்தி வாயிலாக வரக்கூடிய பெருமளவு பணம் இந்த மீனவர்களைச் சென்றடையவில்லை. இனி இந்த நிலைமாறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஒரு தீவு நாடாக இருக்கின்ற போதிலும் வருடமொன்றுக்கு 10 பில்லியன் ரூபா பெறுமதியான தகர மீன்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

எமது நாட்டைச் சுற்றியுள்ள கடலில் உள்ள மீன்கள் பிடிக்கப்படாமல் அவை வயது வந்து இறக்கின்றன என்பதுதானே இதன் அர்த்தம்? என்று நகைச்சுவையாக சுட்டிக்காட்டிய ஷிரான் பெர்னாண்டோ, ரின் மீன் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு உள்ளூர் ரின் மீன் உற்பத்தி ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தாம் பிடிக்கும் மீன்களுக்கு உள்ளூரில் நல்ல விலை கிடைக்கும் என்பது தெரிந்தால் நமது மீனவர்கள் முழு முயற்சியுடன் மீன்களை கொண்டு வருவார்கள். வடக்கிலே இந்திய மீனவர்களின் ஊடுருவல் கூட எமது மீனவர்களாலேயே நிறுத்தப்பட்டு விடும். ஏனெனில் நல்ல விலைக்கு போகக் கூடிய மீன் வளத்தை அவர்கள் இந்திய மீனவர்களுக்கு விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், வின்னா வகை மீனை மட்டுமன்றி வேறு வகை மீன்களையும் உள்ளூரிலேயே தகரத்தில் அடைக்கக் கூடியதாக இருக்கும என்பதையும் சுட்டிக்காட்டினார்.